சென்னை: சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், மற்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெய்த மழை காரணமாக தலைநகர் தண்ணீரில் தத்தளித்து.வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஒரே மாதத்தில் 3வது முறையாக வெள்ளத்தில் சிக்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைவெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. முதல்வரும் நேரில் சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிகள் வழங்கியதுடன் மழை நீரை அகற்றும் பணியையும் முடுக்கி விட்டார்.
இதையடுத்து, சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. அதன் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
மேலும், 51 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்ணீர் வெளியேற்றும் பணியில் 900 கனரக மோட்டார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.