இந்தியாவில் தற்போது முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு சாத்தியமே இல்லை என்று  வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் மத்திய அரசு திடீரென உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையால் மக்கள் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பாரதிய ஜனதா அரசு, பொதுமக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்காகக ஊக்கப்பரிசுகளும் அறிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் இதுவரை பணமில்லா பரிவர்த்னையை ஆதரித்து வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தற்போது அதற்கு எதிராக பேசியிருக்கிறார். கோவா மாநில முன்னாள் முதல்வரும்  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர்.
அம்மாநில தலைநகர் பானாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் தற்போது பணமற்ற பரிவர்த்தனையை  முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர  சாத்தியமே  இல்லை. பணப் பரிமாற்றத்தை சிறிது அளவு குறைக்க மட்டுமே டிஜிட்டல் வர்த்தகம் பயன்படும்” என்று தெரிவித்தார்.
ஆரம்பத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதரவு தெரிவித்த பாரிக்கர், தனது மாநிலமான கோவாவில் புத்தாண்டில் இருந்து 100 சதவீத பணமற்ற பரிவர்த்தனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பணமற்ற பரிவர்தனை சாத்தியம் இல்லை என்று அவர் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணமில்லா பரிவர்த்தனையை சாத்தியமாக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் தலைவரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திர பாபு நாயுடு, “ரூபாய் நோட்டு நடவடிக்கை துயரத்தில் முடிந்துள்ளது. பிரச்சனைகளை என்னால் தீர்க்க முடியவில்லை. பணமில்லா பரிவர்த்தனை இங்கே  தற்போதைக்கு சாத்தியமில்லை” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.