ஈஷா மீதான அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்: அத்தனைக்கும் பதில் சொல்கிறது ஜக்கி நிர்வாகம்!

Must read

ஜக்கி வாசுதவ்
ஜக்கி வாசுதவ்

பிரபல சாமியார் ஜக்கிவாசுதேவ் பற்றி சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் பல ஆண்டுகாலமாக வைக்கப்படுகிறது.  சமீபகாலமாக மிக அதிக அளவில் புகார்கள், பரபரப்புகளுக்கு ஆளானார் ஜக்கி வாசுதேவ். இவை குறித்து ஏதும் கருத்து தெரிவிக்காமல் இருந்ததார் ஜக்கி. அவரது நிர்வாகமும் பதிலேதும் சொல்லாமல் இருந்தது.
இப்போது, தங்களது “ஈஷா காட்டுப்பூ” என்ற மாத இதழில் குற்றச்சாட்டுக்களுக்கான தங்கள் தரப்பைச் சொல்லியிருக்கிறது ஜக்கி தரப்பு.
“கடந்த மாதம் பரபரப்பு செய்திகளில் புழங்கியது ஈஷாவின் பெயர்.  திரித்துக் கூறப்பட்ட பொய்கள் முக்கிய இடத்திலும், உண்மைகள் புறந்தள்ளப்பட்டதும் உண்மை.  குற்றச்சாட்டுக்களை யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் சுமத்தலாம்.  ஆனால், அதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும், அல்லவா?  இதோ ஈஷா மீது தொகுக்கப்பட்ட குற்றச்சாட்டின் பட்டியலும் வெளிவராத உண்மைகளும்…..” என்ற முன்னுரைக்குப் பிறகு, குற்றச்சாட்டுக்களும்  அதற்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன.
தனது இரு பெண்கள் ஜக்கியால் மூளச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் கூறிய காமராஜ்
தனது இரு பெண்கள் ஜக்கியால் மூளச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் கூறிய காமராஜ்

இரண்டு பெண்கள் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள்!
இது தொடர்பாக அப்பெண்களின் பெற்றோர் சமர்ப்பித்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம், உண்மையில்லை என்று தள்ளுபடி செய்தது.  ” பெண்கள் இருவரும் தங்கள் சுயவிருப்பத்தோடு ஈஷா மையத்தில் தங்கி இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.  முழு திருப்தியுடன் இதனை சொல்கிறோம்.  பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை.” என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
 
இந்தத் தீர்ப்பின் மூலம் கட்டாயப்படுத்தி மகள்களை தங்க வைத்துள்ளனர்.  கட்டாயப்படுத்தி பிரம்மச்சரியம் எடுக்கச் செய்தனர் என்று ஈஷா அறக்கட்டளையின்  மீது  பெற்றோர் சுமத்திய குற்றச்சாட்டுகள் தவிடுபொடி ஆகின்றன.   மனித உரிமை மீறல்கள் கூட இங்கு இல்லை என்று சொல்லப்பட்ட பின்னர் சிறுநீரகம் திருடுவது, கர்ப்பப்பையை நீக்குவது, குழந்தைகளுக்கு போதைப் பொருள்கள் கொடுப்பது, சாப்பாடு கொடுப்பதில்லை,   தண்டனை கொடுக்கிறார்கள் என்பவை கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்கள்தான் என்பதை இங்கு உறுதியாக சொல்ல விரும்புகிறோம்.  அந்தப் பொற்றோர் அவர்களது பெண்களைப் பார்ப்பதை, ஈஷா தடுத்ததும் இல்லை.  இனி தடுக்கப் போவதும் இல்லை.
காமராஜின் மகள்கள் கீதா, லதா
காமராஜின் மகள்கள் கீதா, லதா

பிரம்மச்சரியம்: கட்டாயப் படுத்துகிறதா ஈஷா?
ஈஷாவின் பாதை துறவறப் பாதையல்ல.  ஆன்மீகப் பாதை.  ஈஷாவில் பலநூறு திருமணங்கள் நடந்திருக்கின்றன.  வெகு சிலர் துறவறம் எடுத்திருக்கின்றனர்.  முழு விருப்பத்தோடு இப்பாதையை ஏற்க விரும்புகிறேன்.  என்று விண்ணப்பிக்கும் ஒருவரை 2 வருடம் காத்திருப்பில் வைத்து, அவருக்கு துறவறத்திற்கான பக்குவம் ஏற்படும்போது மட்டுமே துறவறம் தரப்படுகிறது.
குடும்ப வாழ்க்கை வாழ்வோர் சிறப்புடன் செயல்பட தேவையான அம்சங்களைத்தான் ஈஷா யோகா வகுப்புகள் முன்வைக்கின்றன.  ஈஷாவில் பல கோடி தியான அன்பர்கள் உள்ளனர்.  அவர்களில் வெறும் 206 பேர் மட்டுமே துறவறப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.  நம் மண்ணின் கலாச்சாரம் துறவறம்.
புத்தர் , காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், விவேகானந்தர், அப்பர், பட்டினத்தார், வள்ளலார் போன்றவர்கள் துறவிகள்தான்.  நம் கலாச்சாரத்திற்கு சந்தியாசத்தை யாரும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.  தொன்றுதொட்டு வரும் மரபு இது.  பல்வேறு சித்தர்களையும், யோகிகளையும், உருவாக்கி அவர்களை வழிபட்டு வரும் புண்ணிய பூமி இது.  இப்படி துறவறத்தை போற்றிக் கொண்டாடிய கலாச்சாரத்தை யாரோ ஒரு சில மூடர்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஈஷா தியான வகுப்பு
ஈஷா தியான வகுப்பு

போதைப்பொருட்கள் கொடுத்து மதி மழுங்கடிக்கப்பட்டுள்ளது!
ஈஷா உலகப் புகழ்பெற்ற ஒரு யோக மையம்.  இது போதைப் பழக்கத்திற்கு அடிமையான இடம் அல்ல.  போதை, மது என மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கும் விஷயங்களில் சிக்காமல் அவற்றைத் தாண்டிப்போன மனிதர்கள்கள்தான் இங்கு வாழ்கிறார்கள்.
ஆசிரமத்தில் உச்சக்கட்ட ஒழுக்க நெறியுடன் வாழ்க்கை நடக்கிறது.  இங்குள்ளவர்களுக்கு போதை தேவையில்லை.  அவர்கள் ஆன்மீகப் பயிற்சிகளின் மூலம் மிக உயர்ந்த நிலைகளில் வாழ்கின்றனர்.  எங்கள் பாதை யோகம்.  தியானம்.
வாழ்வில் நொந்து, நொடிந்து, வேதனையோடு வாழ்பவர்களுக்குத்தான் போதைப் பொருட்கள் தேவைப்படுகிறது.  யோகா செய்து நாள் முழுவதும் ஆனந்தமாய் வாழ்பவர்களுக்கு அப்படியொரு தேவையும் கிடையாது.  அவற்றை பயன்படுத்தும் எண்ணமும் கிடையாது.  கைகளில் யோகம், தியானம் எனும் அற்புத கருவிகள் இருக்கும்போது மதுவும், போதையும் எதற்கு?
யோகா செய்வதால் அறிவு கூர்மையடையுமே தவிர, மழுங்காது.
ஈஷா சம்ஸ்க்ருதி பள்ளி
ஈஷா சம்ஸ்க்ருதி பள்ளி

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களை அடுத்தவரின் துணி துவைப்பது, மாட்டுச்சாணம் அள்ளுவது, கழிப்பறையை கழுவுவது, 1000 சூர்ய நமஸ்காரம், 1000 தோப்புக்கரணங்கள் போடச் சொல்லி துன்புறுத்துகிறார்கள்.
உடலளவிலும், மனதளவிலும் முழுமையான வளர்ச்சி பெற்ற கூர்மையான மனிதர்களை சம்ஸ்கிருதி (பள்ளி) உருவாக்குகிறது.  “வயிற்றுப்பிழைப்பு” மட்டும்தான் வாழ்க்கை என்ற கண்ணோட்டத்தில் வாழாமல்,, வாழ்க்கையை முழுமையாய் வாழக்கூடிய பக்குவமான தலைமுறையினராய் இவர்கள் இருப்பார்கள்.  ஆனந்தமான, சமநிலையான மனிதர்களாய் விளங்குவார்கள்.
சமஸ்கிருதி பாடசாலையை நடத்துவது அன்பிலும், அரவணைப்பிலும் சேவை செய்யும் தன்னார்வத் தொண்டர்கள், விவரமில்லாதவர்கள் இதுகுறித்து பேசுவது அபத்தம்.  இங்கிருக்கும் சூழல் பெற்றவர்களை ஈர்த்திருக்கிறது.  தங்கள் குழுந்தைகள் இப்படியொரு சூழ்நிலையில் வளரவேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்திருக்கிறது.  எனவே, குழந்தைகளில் பெற்றோர் முடிவு செய்யட்டும் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று, எங்கு வளரவேண்டும் என்று!
இங்கே சேரவேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றனவே….  இந்த ஒரு சான்று போதாதா?
இங்கிருந்து வெளியனுப்பப்பட்ட குழந்தையின் தந்தை.  குழந்தை வெளிவந்துவிட்டதே என்ற ஆதங்கத்தில் புலம்புகிறார்.  புலம்பலுக்கு உள்நோக்கம் ஒன்றே அடிப்படை நமது நோக்கம் உயிர்நோக்கம்.உயிர்நோக்கம்.
ஈஷா மாணவி
ஈஷா மாணவி

குழந்தைகளை கட்டாயப்படுத்தி பிரம்மச்சரியம் வழங்குகிறார்கள்.
டீன் ஏஜ் என நாம் அழைக்கும் வயதில், குழந்தைகளுக்கு சில வழிகாட்டுதல் தேவை.  அவர்களது சக்தியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் நெறிப்படுத்துவதும் அவசியம்.  இதை செய்யாததால் முறைதவறிச் செல்லும் பல ஆயிரம் குழந்தைகளை நாம் தினசரி வாழ்வில் கண்டுவருவதுதான் நிதர்சன உண்மை.  18 வயதிற்கு கீழள்ள ஒரு பையனேயோ, பெண்ணையோ உடலுறவுக்கு ஆட்படுத்தக்கூடாது என்பது இந்தியச் சட்டம்.  பெற்றோரின் கவலையும் இதுதான்.  18 வயதுக் கூட நிரம்பாத பிள்ளைகள் பாலியல் ரீதியான உறவில் ஈடுபடுவதைத்தான் குற்றம் சுமத்துவோர் விரும்புகிறார்களா?
சமஸ்கிருதி வேத பாடசாலையின் சட்டங்கள், வழிமுறைகள் அனைத்தும் பெற்றோருக்குத் தெளிவாக விளக்கப்படுகிறது.  அவர்கள் புரிந்துக் கொண்ட பின்னரே அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படுகிறது.
மரம் நடும் ஜக்கி
மரம் நடும் ஜக்கி

மகாசத்சங்கம் என்ற பெயரிலும் மரம் நடும்விழா என்ற பெயரிலும் பெரிய அளவில் பணவசூல் செய்யப்பட்டு முறைகேடு நடக்கிறது!
ஈஷாவுக்கு உலகம் முழுக்க அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  தமிழகத்தில் பசுமை கலாச்சாரத்தை ஈஷா ஏற்படுத்தி வருகிறது.  இதுவரை 2.8 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன.  2 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றுகூடி இதனை சாதித்திருக்கறார்கள்.  தமிழ்நாட்டின் பசுமைப்பு பரப்பு கடந்த பத்தாண்டுகளில் 5% அதிகரித்திருக்கிறது என்ற அரசு அறிக்கை சொல்கிறது.  ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்திற்கு நம்நாட்டின் உயர்ந்த விருதான ” இந்திராகாந்தி பர்யவரன் புரஸ்கார்” விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரே நாளில் அதிக மரக்கன்று நட்டதற்கான கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டிருக்கிறது.  இவை சாதாரண சாதனைகள் அல்ல.
சுற்றுச்சூழலுக்கான தேசிய விருது வழங்குவதற்கு முன்னர், மத்திய சூற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், பசுமைக்கரங்கள் திட்டத்தின் கணக்கு வழக்குகளையும், செயல்பாடுகளையும் உன்னிப்பாக ஆய்நது, அதற்கான கோப்புகளைப் சரிபார்த்திருக்கிறது.  அதன்பின்னரே,  ” இந்திராகாந்தி பர்யவரன் புரஸ்கார் விருது” முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களால் வழங்ககப்பட்டது.
ஈஷா யோகா மையம் (வெள்ளியங்கிரி)
ஈஷா யோகா மையம் (வெள்ளியங்கிரி)

ஈஷா, வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது!
ஈஷா யோக மையம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பட்டா நிலத்தில் மட்டுமே செயல்படுகிறது.  உண்மையை சொல்லப்போனால், இங்கு ஈஷா வந்தபின் வன ஆக்கிரமிப்பு குறைந்து, மறைந்து போயிருக்கிறது.  இங்குள்ளவனப்பகுதிகளில் நடைபெற்று வந்த சட்ட விரோதமான செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.  இதனால், ஈஷா மையத்திற்கு சில எதிரிகள் உருவாகி உள்ளனர்.  இவர்கள் ஈஷாவை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
வனத்துறை நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதா என்கிற கேள்விக்கு வனத்துறையே பதில் தந்துள்ளது. மண்டல வனப்பாதுக்காப்பு காவலர்  தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் ஈஷா வளாகத்தை ஆய்வு செய்தனர்.  அதன்பின், முதன்மை வனப் பாதுகாவலருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  அதில், ஈஷா யோக மையம், பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் ஈஷா செய்யவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.  (document reference number: CFCIT /07/2013)
இதுபற்றி ஈஷா மையம் பலமுறை விளக்கம் அளித்ததையும் பொருட்படுத்தாமல் ஒருசிலர் தொடர்ந்து இதுபற்றியே பேசிவருவது, மதிப்பிற்குரிய அரசுத்துறையை அவமரியாதை செய்வது போல் உள்ளது.
ஈஷா மையத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் முள்வேலி
ஈஷா மையத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் முள்வேலி

ஈஷா யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது!
யானை வழித்தடம் அல்லது யானை வலசப் பாதை என்பது யானைகள் வசிக்கும் இரண்டு வனங்களை இணைக்கிற பாதையாகும்.  மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத்துறையால் யானை வழித்தடம் என்று குறிப்பிட்டுள்ள 88 யானைப் பாதைகளில் ஈஷா இல்லை.  சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி யார் வேண்டுமானாலும் இது பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, ஜக்கியின் ஈஷா யோகா மையத்தின் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
 
 

More articles

Latest article