சென்னை:
சென்னையில் மழை காரணமாக மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழையின் காரணமாகச் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, தியாகராயர் பகுதியில் மேட்லி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை, கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை உள்ளிட்ட 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியது.

இந்நிலையில் இன்று தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. ஏற்கனவே சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு இருந்த மாநகராட்சியினர், தங்கள் பணிகளைத் தீவிரப் படுத்தியதை அடுத்து, மூடப்பட்ட சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது. இதையடுத்து, அனைத்து சுரங்கப்பாதைகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

கடும் மழையிலும் அயராது உழைத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று கரையைக் கடந்த தாழ்வு மண்டலம் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வழுவிழக்கும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; அடுத்த 12 மணி நேரத்திற்குக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.