சென்னை:
கொரோனாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது.


இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, கடந்த மே 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி கிடைத்ததையடுத்து, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.

இநிலையில், இந்தியா தடுப்பூசியில் தன்னிறைவு அடைந்துவருகிறது என்றும் சொல்லும் அளவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யவிருக்கிறது. இதனால் தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஜூன் மாதத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும். இதன் விலை ஒரு டோஸுக்கு ரூ.1195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இதில், தடுப்பூசி மருந்தின் விலை ரூ.995 என்றும், ஊசி செலுத்துவதற்கான கட்டணம் ரூ.200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது. முதற்கட்டமாக அப்போலோ மருத்துவமனை ஊழியர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.