டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான  கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களை நிரம்பும் வகையில், 9 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 நீதிபதிகள் பெயர்களை பரிந்துரைத்துள்ளது இதில் 3 பெண் நீதிபதிகளும் அடங்குவர்.

அதன்படி, குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பெலா திரிவேதி கர்நாடக உயர் நீதிமன்றநீதிபதி பிவி நாகரத்னா, தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி,  ஆகிய பெண் நீதிபதிகள் உடன்,  நீதிபதிகள் ஓகா, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே கே மகேஸ்வரி ஆகியோரை கொலிஜியம் தேர்வு செய்துள்ளது. மேலும், கேரள உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி சி டி ரவிக்குமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதி  எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்திற்கு  பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஎஸ் நரசிம்மா பெயரையும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

மூத்த வழக்கறிஞரான இவர் ராமஜென்ம பூமி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக பிசிசிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

கொலிஜியம் அனுப்பிய 9 நீதிபதிகள் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 33 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.