திமுக தலைமையிலான கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும், ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது என்பதே உண்மை.  தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து தானாகவே வெளியேறட்டும் என்ற நோக்கில், திமுக தலைமை செயல்பட்டு வருகிறதோ என்ற எண்ணத்தை திமுக தலைமையின் சமீபகால நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழக தேர்தல்களத்தைப் பொறுத்தவரை, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

திமுக 119 தொகுதிகளில் களமிறங்கி வெறும் 23 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. பாமக போட்டியிட்ட 30 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வென்றது.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டன. 2011ல் 63 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் 2016ல் வெறும் 41 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. வேறுவழியின்றி அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெறும், 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம்,  கட்சித் தலைவர்கள் தொண்டர்களிடையே பிணைப்பு இல்லாததும், களப்பணியாற்று வதில் மெத்தனமுமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதுமட்டுமின்றி,  2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட  9 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், இந்த வெற்றிக்கு, தமிழகத்தில் பாஜக மீதான அதிருப்தியே காரணம் என்று கூறப்பட்டது.

மேலும், அதிமுகவின் கோட்டையான தேனி தொகுதியில், அந்த தொகுதிக்கு தொடர்பே இல்லாத, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் கட்சி களமிறக்கியதும், அவர் ஓபிஎஸ் மகனிடம் தோல்வி அடைந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சிக்குள் உள்குத்து நடைபெற்று வருகிறது என்பதை உலகுக்கு உணர்த்தியது.

கட்சியின் வேட்பாளர் தேர்வில், காங்கிரஸ் தலைமை சரியான வியூகத்தை வகுக்காததும், மூத்த தலைவர்களின் மிரட்டலுக்கு பயந்து அவர்களின் வாரிசுகளுக்கு இடங்களை ஒதுக்கியதும் காரணமாக கூறப்பபட்டது. இதுபோன்ற ஒரு சூழலை சந்தித்ததாக ராகுல்காந்தியே, காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூட்டத்தில், ப.சிதம்பரம் மீது நேரடியாக குற்றம் சாட்டியிருந்ததையும் மறந்துவிட முடியாது.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டபோதும், அந்த கட்சியால் பெரிய அளவில் வெற்றியைப் பெறமுடியவில்லை. இது மட்டுமின்றி சமீப காலமாக நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் சோபிக்க முடியவில்லை. மகாராஷ்டிராவிலும், தேசிய கட்சியான காங்கிரஸ், சிவசேனா பின்னால் ஒழிந்துகொள்ள வேண்டிய சூழலே ஏற்பட்டது.

இதுபோன்ற அரசியல்  சூழல் காரணமாக திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட முயற்சித்து வருகிறது. இதை உணர்ந்துகொண்ட காங்கிரஸ் தலைமையும், திமுக கைவிட்டு விட்டால், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில்  அனாதையாகிவிடுமோ என்ற பயத்தில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் கூறியதுடன், தேர்தலில் போட்டியிடும் இடங்களை கூடுதலாக கேட்டு திமுகவை நிர்பந்திக்க மாட்டோம் என்று சரணாகதி அடைந்துள்ளது

தினேஷ் குண்டுராவின் பேச்சு  பல தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போதைய சூழலில் வேறு ஏதும் செய்யாத முடியாத இக்கட்டாக நிலையில்,  தினேஷ் குண்டுராவின் பேச்சை, திமுக தலைமை தனக்கு  சாதகமாக்கி, காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி வருவதாக தெரிகிறது.

இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில்தான் ராகுல்காந்தியின், தமிழ் வணக்கம் என்ற பெயரிலான 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. ராகுல் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டங்கள் தானாக கூடியதா அல்லது கூட்டப்பட்டதா என்பது வேறு விஷயம். ஆனால், ராகுலின் எளிமையான நடவடிக்கை, அவரது உணர்ச்சிகரமான பேச்சு மற்றும், மக்களுடன் இரண்டர கலந்து உரையாடியது, உணவு உண்டது போன்ற நிகழ்வுகள் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தி இருப்பது ஆறுதலான விஷயம்.

அதேவேளையில், ”ராகுலின் பிரசாரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பற்றி அதிக அளவில் பேசவில்லை. கடைசி நாள் பிரசாரத்தில் மட்டுமே அதிமுக ஆட்சியை மேலோட்டமாக விமர்சித்ததுடன் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்று கூறினாரே தவிர, திமுக ஆட்சி அமையும் என அவர் எந்தவொரு இடத்திலும் வலியுறுத்தி கூறவில்லை. ராகுலின்  தமிழ் வணக்கம் என்ற பெயரிலான தனிப்பிரசாரம், தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தாலும், அது,  கூட்டணிக்குள் சலசலப்பு இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளது என்பதையும் மறந்துவிட முடியாது.

தமிழகத்தில் கட்சியை வளர்க்கவோ, மக்களுக்காக போராடவோ, டெல்லி தலைமை மட்டுமல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட கவனம் செலுத்த முன்வருவதில்லை என்பதே உண்மை நிலவரம். அப்படியிருக்கும்போது ராகுலின் தமிழக தேர்தல் பிரசாரம், தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா,. இதனால் காங்கிரசுக்கு  வாக்கு வங்கி அதிகரிக்குமா,  மக்களிடையே என்ன மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர்களோ, தேர்தல் நேரத்தில் மட்டுமே, வெள்ளை சுள்ளையாக களத்தில் காட்சி தருகிறார்களே தவிர மற்ற நேரங்களில், அவர்களை தொண்டர்கள்  தேட வேண்டிய சூழலே  தமிழகத்தல் உள்ளது. இதுமட்டுமின்றி  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் கட்சித் தலைமை அதிக கவனம் செலுத்த தவறுவதும், மாநிலத்தில் கட்சியின் நிலவரம்,  மற்றும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியின் மாநில தலைவர்களின் கருத்துக்களை செவிமடுக்க மறுத்து, கட்சிக்காக உழைப்பவர்களை விட்டுவிட்டு,  தங்களது வேண்டியவர்களை வேட்பாளராக அறிவிப்பதும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியையும், கட்சித் தலைவர்களையும் சரியாக கணித்துள்ள திமுக தலைமை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவதை விரும்ப வில்லையோ என்பதைத்தான், காங்கிரஸ் கட்சி மீதான  திமுகவின் அலட்சியப்போக்கு தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சியை நேரடியாக பகைத்துக்கொள்ள விரும்பாத திமுக தலைமை, வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகக்குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்கி,  நெருக்கடி கொடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு  இக்கட்டான சூழலை உருவாக்க முனைந்துள்ளது.

திமுகவின் நெருக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவணங்குமா அல்லது, தலைநிமிருமா என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வரும். ஆனால், திமுகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விடும் திட்டம் என்றும் அரசியல் நோக்கர்கள்  கூறி வருகின்றனர். ஆனால், திமுக எவ்வளவுதான் இழிவுபடுத்தினாலும், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி திமுக முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது. இதற்கு காரணம்,  தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது போல கூட்டணி என்ற மாய வலையில் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளதே காரணம் என்பதே உண்மை.

தமிழகத்தின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு வித்திட்டது  காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்தான். பொற்கால ஆட்சி வழங்கிய காமராஜர் ஆட்சியின் போதுதான் தமிழகத்தில்  பிரமாண்டமான அணைகள், தொழிற் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த இரு திராவிட கட்சிகளும், குறிப்பிடத்தகுந்த தொழில் வளத்தையோ, இயற்கை வளத்தையோ உருவாக்க முன்வரவில்லை என்பதுதான்  உண்மை நிலவரம்.

ஆனால், காமராஜர் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பலம் பொருந்திய தலைவரை கட்சி தலைமையால் இதுவரை  உருவாக்க முடியவில்லை என்பது சோகமான விஷயம்.  இதுதான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பின்னடைவு….

இதுபோன்ற சூழலைத்தான் திமுக இன்று தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. நாங்கள் கொடுக்கும் இடங்களில்தான் நீங்கள் போட்டியிட வேண்டும், இல்லையேல், கூட்டணியில் இருந்து ஓடுங்கள் என்று, மறைமுகமாக மிரட்டல் விடுக்கத் தொடங்கி உள்ளது…

100 ஆண்டு பாரம்பரிய மிக்க  காங்கிரஸ் கட்சி இன்று, சில இடங்களுக்காக திராவிட கட்சிகளிடம் மடியேந்தி நிற்பது காலத்தின்கோலம்…

காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக களத்தில் நிற்காதவரை தனது வாக்கு வங்கியை அதிகரிக்கமுடியாது என்பதே உண்மை நிலவரம்.

(தொடரும்…)

கூட்டணி கலாட்டா -தொடர்1: கூட்டணி கட்சிகளை வேண்டா விருந்தாளியாக நினைக்கும் திமுக தலைமை….

கூட்டணி கலாட்டா-2:  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக திட்டமா…?