டில்லி

சீனாவின் சாலை அமைப்பு பணியினர் இந்தியாவின் எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க முயன்றுள்ளனர்.

இந்திய – சீன எல்லையில் சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டது.    அதன் பிறகு இரு நாடுகளுக்குள் உடன்பாடு ஏற்பட்ட பின் இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.   இது நடந்து சுமார் 75 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது அருணாசலப் பிரதேசப் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று அருணாசலப் பிரதேசத்திலுள்ள இந்தியா  சீனாவின் எல்லையோரக் கிராமப் பகுதி ஒன்றில் சீனர்களின் நடமாட்டம் காணப் பட்டுள்ளது.  இது குறித்து ராணுவத்தினரிடம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   அவர்கள் வந்து பார்த்த போது அந்த சீனர்கள் இந்திய எல்லைக்குள் சுமார் ஒரு கிமீ தூரம் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அப்போது எல்லைப் புறத்தில் சாலை அமைப்புக்கு தேவையான இயந்திரங்கள் இருந்ததும்,  ஒரு கூடாரத்தில் சில சீனர்கள் தங்கி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.    மேலும் அவர்களில் சிலர் சாலை அமைக்கும் பணியில் எல்லை ஓரத்தில் ஈடு பட முயன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.   அவர்களிடம் இருந்த சாலை அமைப்புக்கு தேவையான இயந்திரங்களை ராணூவம் பறிமுதல் செய்துள்ளது.

பிறகு அங்கு வந்த சீன ராணுவத்தினரிடம் இது குறித்து தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது.   பிறகு இரு நாட்டு ராணுவத்தினரும் அந்த சாலை அமைப்பு ஊழியர்களை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.   மேலும் அங்கிருந்த கூடாரங்கள் கலைக்கப் பட்டுள்ளன.    தற்போது எல்லை ஓரத்தில் காவல் அதிகப் படுத்தப் பட்டுள்ளது.