ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் பார்லி – ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் பணிசெய்த 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளைப் பிரதானமாக வைத்து பிரபலமடைந்த பிஸ்கட் இந்த பார்லி – ஜி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், காலத்தின் ஒரு கொடுமையாக, அந்த பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்திலேயே குழந்தை தொழிலாளர்கள் பணி செய்துள்ளனர்.

பார்லி – ஜி நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், குழந்தை தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு நடவடிக்கை அமைப்பு, சோதனை செய்து 26 குழந்தை தொழிலாளர்களை மீட்டது.

அவர்கள் அனைவருமே 13 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த மாவட்ட சிறப்பு நடவடிக்கை அமைப்பானது, ஜுன் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்ட குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை ஒட்டி ஏற்படுத்தப்பட்டது என்று கூறினார் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி நவ்நீத் ஸ்வர்ன்கர்.

“இந்தப் புதிய அமைப்பின் தீவிர செயல்பாடுகளையடுத்து, கடந்த 6 நாட்களில் மட்டும், மாவட்டம் முழுவதும் சுமார் 51 குழந்தை தொழிலாளர்கள் மீட்டுகப்பட்டுள்ளனர்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

சத்தீஷ்கர் மட்டுமின்றி, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள பார்லி – ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.