பாட்னா:

பீகாரில்  மாநிலத்தில்  மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக  உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சோகமும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நோயின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. கடந்த மாதங்களில் உயிரிழப்பு குறைவாக இருந்த நிலையில், இந்த மாதம்  மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் 43 குழந்தைகள் பலியானதாகவும், 117 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ தொட்டுள்ளது. மேலும்  பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர் உயிரிழப்பு நிகழ்ந்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் முசாபர்பூர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் ஆய்வு செய்து, தீவிர நடவடிக்கை எடுக்கும்படி  மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

பீகாரில் ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2வகையான மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவிஇருப்பதாகவும், இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு   ரத்தத்தில் குளூகோஸ் குறைந்து வருவதால், அவர்கள் மரணம் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் தொடர்ந்து குளூகோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.