சென்னை:  மத்திய, மாநில அரசின் செயல்திட்டங்கள் குறித்து கவர்னருக்கு அறிக்கை அளிக்க தயாராக இருக்க வேண்டும் என தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து துறைச்செயலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை குறித்து  சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் விமர்சனம் எழுப்பி உள்ளார். மேலும், கவர்னர் வரம்பை மீறினால்,  முதல்வர் ஸ்டாலின் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாட்னாவைச் சேர்ந்த ஆர்.என்.ரவி 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார். அவரை தமிழக கவர்னராக மத்தியஅரசு நியமித்தது. இது, தமிழகஅரசு வைத்த செக் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில், மத்திய, மாநில அரசின் செயல்திட்டங்கள் குறித்து கவர்னருக்கு அறிக்கை அளிக்க தயாராக இருக்க வேண்டும் தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழக தலைமைச்செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு உள்பட பலரை ஆளுநர் தனியாக அழைத்து ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது தலைமைச்செயலாளரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

தமிழக அதிகாரிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது அழைத்து பேசுவது தமிழகத்தில் இரண்டு அரசுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என  கூறியதுடன்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிட அவசியமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வதாக இருந்தபோது எந்த அதிகாரியும் ஆளுநரை சந்திக்க கூடாது என்று உத்தரவு போட்டார். அரசு அதிகாரிகள் மட்டுமின்றி காவல்துறையில் இருந்தும் எந்த அதிகாரிகளும் ஆளுநரின் அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால், எடப்பாடி ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு சென்ற போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆளுநருக்கு வரவேற்பு கம்பளம் விரித்தபோது தமிழ்நாடு மக்கள் கைகொட்டி சிரித்தார்கள்.   பன்வாரிலால் புரோஹித் செய்த ஆய்வுக்கு திமுக தரப்பிலிருந்து காத்திரமான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

தற்போது ஜெயலலிதாவின் ஆட்சியும் இல்லை, எடப்பாடி ஆட்சியும் இல்லை. அரசியல் சாசன சட்டம் ஆளுநருக்கு கொடுத்திருக் கும் உரிமையை ஸ்டாலின் மதிப்பார். அதேசமயம் ஆளுநரின் அதிகாரம் வரம்பு மீறினால் பழனிசாமி போல் பயப்படக்கூடியவரும் இல்லை என்று எச்சரித்துள்ளார்.

“ஆட்டுக்கு தாடி எதற்கு மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு” என்று முழங்கியவர் பேரறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஆளுநருக்கு எதற்காக அரசின் நலத்திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கியமாக மாநில சுயாட்சி என்பது திமுகவின் அடிநாத கொள்கைகளில் ஒன்று. தற்போது நலத்திட்டங்கள் குறித்த அறிக்கையை ஆளுநருக்கு தாக்கல் செய்தால் அது மாநில சுயாட்சியை அடகு வைப்பதற்கு சமம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது