சென்னை,

கெயில் நிறுவனம் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துனைபோனால் விவசாயிகளை திரட்டி எடப்பாடியில் முதல்வர் வீட்டின் முன் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“மத்திய அரசின் கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சி யிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு குழாய் பதித்து எரிவாயு எடுத்து செல்ல முயன்றது. இதற்காக தமிழகத்தின் நீலகிரி கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் மாவட்டங்களில் விளைநிலங்களில்  குழாய் பதிக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி விவசாயிகள் சிலரிடம் மிரட்டி ஒப்புதலைப் பெற்று  குழாய் பதிக்கும்  நடவடிக்கையை மேற்கொண்டது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அன்றைய முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் தடை விதித்ததோடு,  சாலை ஓரமாகவே குழாய் பதிக்க அனுமதியும் வழங்கினார்.

பிறகு நீதிமன்றம் கெயில் நிறுவனம் நீதிமன்றம் சென்றபோதும், தனது கருத்தில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.

அவர் மறைவுக்கு பிறகு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சுயநலத்திற்காக  மத்திய அரசுக்கு அடிபணிந்து துணை போகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹைட்ரோகார்பன், மீத்தேன் , ONGC இயற்கை எரி வாயு உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும்  கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்க்கொள்ள பிரதமர் மோடி உத்திர விட்டுள்ளார் என வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டல விவசாயிகள் அழிவதற்க்கு துணை போகக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வழியை பின்பற்றி  விளை நிலங்களுக்குள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.

மறுக்கும் பட்சத்தில் கொங்கு மண்டல விவசாயிகளை ஒன்று திரட்டி எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன் முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறேன்.” என்று பி.ஆர். பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.