சென்னை: தனியார் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டியின்போது, சென்னை உள்பட 4 மாவட்டங்களை உலுக்கிய மிக்ஜாம் புயல் பாதிப்பு, திருப்புகழ் கமிட்டி அறிக்கை,  ஆளுநர் விவகாரம், இண்டியா கூட்டணி என பல்வேறு கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்தார்.

  • ஆளுநர் தமிழ்நாட்டின் நன்மைக்காக செயல்பட வேண்டும்
  • இண்டியா கூட்டணி மக்களை தேர்தலில் எளிதாக வெற்றிபெறும்
  • வெள்ள முன்னெச்சரிக்கைக்கு மத்திய குழு பாராட்டு
  • திருப்புகழ் கமிட்டி அறிக்கை செயல்படுத்தப்பட்டதா?
  • வெள்ளத்துக்கு காரணம் ரியல் எஸ்டேட்டின் வரைமுறையற்ற வளர்ச்சியா?
  • வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், செலவினம் தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தி இந்து  ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி விவரம்:-

கேள்வி: அண்மையில் வெளியான இந்தி பேசும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் சக்தியை தடுப்பதற்கு இல்லை என்பதை உணர்த்து வதாக இருக்கிறது. இந்தச் சூழலில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் எதிர்காலத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்

பதில்: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. சட்டப்பேரவைத் தேர்தல்கள் மாநிலங்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்கொள்ளப்படுகின்றன.

ராஜஸ்தானில் பாஜக வென்றிருந்தாலும்கூட வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால், காங்கிரஸைவிட வெறும் 10 லட்சம் வாக்குகளே பாஜக அதிகம் பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் பாஜக 6 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டுமே 35 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளது. இதிலிருந்து, பாஜக எதிர்ப்பு வாக்குகளை மடைமாற்றியிருந்தால் நிச்சயமாக இந்த மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இண்டியா கூட்டணியானது, மக்களவைத் தேர்தலின்போது பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும். அதன்மூலம் எளிதாக வெற்றியை சாத்தியப்படுத்தும்,. 3 மாநிலத் தேர்தல் முடிவு எங்களுக்கு ஒரு பாடம்.

கேள்வி: நீங்களும், ஆளுநரும் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநரும் உங்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு நன்மை பயக்கும் என நினைக்கிறீர்களா?

பதில்: நான் நிறையமுறை ஆளுநரை சந்தித்து ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். நாங்கள் பல அரசு நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் என்னுடன் நல்லமுறையிலேயே பழகியுள்ளார். இங்கே சந்திப்பதென்பது பிரச்சினையல்ல. ஆளுநர் தனது மனப்பாண்மையை மாற்றி மாநில நனுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு, வளர்ச்சிக்கும், மாநிலக் கொள்கைகளுக்கு எதிரான சக்திகளின் கைகளில் கைப்பாவையாக இருப்பதை அவர் தவிர்த்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தர வேண்டும்.

கேள்வி: சென்னை வெள்ள பாதிப்பைப் பார்த்த மத்தியக் குழு பாதிப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. மாநில அரசின் முயற்சிகளையும் பாராட்டியுள்ளது. இந்தச் சூழலில் நீங்கள் நிவாரணப் பணிகள் நிறைவாக செய்யப்பட்டதாக உணர்கிறீர்களா?

பதில்: மத்தியக் குழு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டியது. நீர்நிலைகளில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் வெளியேற்றப்பட்டதை பாராட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதே கருத்தை என்னிடம் சொன்னார். திமுகவும்- பாஜகவும் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் மத்திய அரசு எங்களைப் பாராட்டியுள்ளது என்றால் அது எங்களின் திறன்வாய்ந்த செயல்பாட்டிற்கான சான்று. சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்தது. மழை நின்ற மறுகனமே நாங்கள் நிவாரணப் பணிகளைத் தொடங்கினோம்.

போக்குவரத்து அடுத்தநாளே சீரானது. பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மின் சேவை சீரடைந்தது. புறநகர்ப் பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியது. வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தோம். அத்தியாவசிப் பொருட்களை வழங்கினோம்.

நானே தனிப்பட்ட முறையில் பல இடங்களுக்குச் சென்றேன். 20 அமைச்சர்கள், 50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 20ஆயிரம் அரசு ஊழியர்கள் களத்தில் பணியாற்றினர். பிற மாவட்டங்களில் இருந்தும் உதவிகள் வந்தன. இன்றுவரை திமுக தனிப்பட்ட முறையில் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து வருகிறது. நாங்கள் மக்களுக்கான பணி புரிகிறோம். அவர்களுக்காக இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறோம். நீங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமா என வினவினீர்கள். என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டால் எப்போதுமே மக்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

கேள்வி: 2015-ல் அப்போதைய அரசு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்கூட்டியே திறந்துவிடாததால் சென்னை பேரழிவைச் சந்தித்தது. ஆனால் உங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பாதிப்பு பரவலாக இருந்தது ஏன்?  அரசு என்ன பாடம் கற்றுக் கொண்டுள்ளது?

பதில்: 2015-ல் அதிகாரிகள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதியைப் பெற்றே செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட வேண்டியதாக இருந்தது. ஆனால் எங்கள் அரசு நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பை படிப்படியாக செய்தது. நிலைமையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தது. சென்னை ஐஐடியின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2015 வெள்ள மனிதப் பேரிடர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் மிச்சாங் புயல் 36 மணி நேரத்தில் 53 செ.மீ மழைப்பொழிவைக் கொண்டு வந்தது. மிச்சாங் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவிலேயே 16 மணி நேரம் நின்றிருந்தது. மணிக்கு 8 முதல் 10 கிமீ வேகத்தில் நகர்ந்தது. இதனால் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது. 177 ஆண்டுகளில் இதுவே மூன்றாவது பெரிய மழைப்பொழிவு. எனவேதான் தண்ணீர் அதிகம் தேங்கியது. கடல் மட்டம் உயர்ந்து இருந்ததால், போய்ச் சேரும் தண்ணீரை உள்வாங்கவில்லை. இதுவும் இப்போதைய சூழ்நிலைக்குக் காரணம் ஆகும்.

எங்கள் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரியபோது பிரதமரும் கூட இதே கருத்தைக் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழகம் தான் காலநிலை மாற்ற நடவடிக்கைத் திட்டத்தை அமல்படுத்திய ஒரே மாநிலம். நாங்கள் இதற்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைத்துள்ளோம். சுற்றுச்சூழல் துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றப் பிரச்சினைக்கு வேறு எந்த மாநிலமும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை

மக்கள்தொகையைப் பொறுத்து புயல், வெள்ளத்தை எதிர்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் தான் மிகப்பெரிய பிரச்சினை யாக இருக்கப்போகிறது என நான் நிறைய தருணங்களில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) நிச்சயம் வழிவகுக்கும்.

கேள்வி: சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளும் தண்ணீர் வடியும் பாதைகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது எல்லா ஊர்களிலுமே இது போன்ற நிலைமை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளைச் சுணக்கம் காட்டாமல் அகற்ற அரசு முன் வருமா? புறநகர்ப் பகுதிகளில் ரியல் எஸ்டேட்டின் வரைமுறையற்ற வளர்ச்சி வெள்ளத்தை அதிகப்படுத்தியதா?

பதில்: 2011 முதல் 2021 வரை அதிமுக எந்த ஒரு திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. அதற்கான விலையை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் பரிந்துரைகளின்படி நாங்கள் பல்வேறு திட்டங்களை இப்போது செயல்படுத்தி வருகிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. எவ்வித ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

நீர்நிலைகளையும், வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டும். அகலப்படுத்த அத்தகைய நீர்நிலைகளைச் சுத்தம் செய்து வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 220.45 ஹெக்டேர் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

கேள்வி: நீர்ப்பிடிப்பு மிக்க நெல்வயல்கள் குடியிருப்புகளாக மாறுவது ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறுகிறது. அவற்றை தடுக்கவோ, வரைமுறைப்படுத்தவோ அரசு ஏதாவது செய்ய முடியுமா?

பதில்: நான் ஏற்கெனவே கூறியது போல் மூன்றாவது முழுமைத் திட்டத்தை (Third Master Plan) வடிவமைக்கும்போது, இது தொடர்பான அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: புயல், வெள்ளத்தின்போது அரசு இயந்திரங்கள் கடுமையாக இயங்குகின்றன ஆனால் அதன்பின்னர் தேங்கிவிடுகின்றன. ஆண்டு முழுவதுமே நிலைமை யைக் கண்காணிக்க முடியாதா?

பதில்: அரசுத் தரப்பில் எந்தவித சுணக்கமும் இல்லை. திமுக அரசு செயல்படுத்தியுள்ள மழைநீர் வடிகால் திட்டத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். திமுக 2021 ஆட்சிக்கு வந்தது. எங்களின் வடிகால் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிப்பை குறைத்தது. எஞ்சிய பணியையும் விரைவில் முடித்துவிடுவோம். அடுத்தக் கட்டமாக புதிய திட்டங்களை வகுப்போம். அப்போது சென்னையின் மக்கள் தொகை, நகரின் விரிவாக்கம் ஆகியனவற்றை கருத்தில் கொண்டு திட்டங்களை வகுப்போம்.

அரசின் பணிகளில் சுணக்கம் இல்லை. கழக ஆட்சி ஆறாவது முறையாக வந்தபிறகு நாங்கள் செய்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்ப் பணிகளைப் பாருங்கள். அதனால்தான் பெரிய அளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து விடுவோம்.அடுத்தகட்டமாக பல புதிய பணிகளைத் தொடங்க இருக்கிறோம். எனவே, இது முடிவுற்று விடும் பணியல்ல, தொடர்ச்சியான பணி என்பதை நாங்கள் தொடர்ந்து அறிந்துள்ளோம். மக்கள் தொகை பெருகப் பெருக, நகரம் விரிவடைய விரிவடைய எங்களது திட்டமிடுதல்களும் விரிவடையும் என உறுதி அளிக்கிறேன்.

கேள்வி: முதல்வராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆளுநர் உங்களை தெரிவித்திருக்கிறது. அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?

பதில்: மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சினை. ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

கேள்வி: திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றனவே?

பதில்: முதலில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அறிக்கை விடும் எதிர்க்கட்சிகள் பேரிடர் களத்திலும் இல்லை. நிவாரணப் பணிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஈடுபடவில்லை. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல திட்டங்களைச் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது. இன்னும் செயல்படுத்தவுள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அத்திட்டங்களின் தற்போதைய நிலைஆகியவற்றைத் தொகுத்து விரைவில் எங்கள் அரசு பொதுவெளியில் வெளியிடும்.

என்னைப் பொறுத்தவரை, இந்த அரசு ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற வகையில் செயல்படும் அரசு. இந்த இரண்டரை ஆண்டுகளில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை யும், நாங்கள் வெகுவிரைவில் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்.

இவ்வாறு கூறினார்.

நன்றி: தி இந்து