சென்னை: புயல் நிவாரணம் வழங்கும் வகையில்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக் கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள்மூலம் ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதால், வரும் ஞாயிற்றுக்கிழமையான (டிச.17ஆம் தேதி)  இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

டிசம்பர்  4ந்தேதி ஆந்திர பகுதியில் கரையில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக டிசம்பர் 3ந்தேதி, 4ந்தேதி ஆகிய இரு நாட்கள்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழை மற்றும் சூறைக்காற்று வீசியது. இதில் சென்னை  கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தில் சென்னை மீண்டும் மிதந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை (டிச.13) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.