சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண தொகைப்பெற டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  பல இடங்களில் டோக்கனைகளை பெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சில பகுதிகளில்  ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று ஒரு இடத்தில் அமர்ந்து, அந்த பகுதி மக்களுக்கு டோக்கன்களை வழங்கி வரும் நிலையில், சில பகுதிகளில் டோக்கன்கள் ரேசன் கடைகளிலேயே விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், இன்று  அதிகாலை முதலே பல ரேஷன் கடை வாசல்களில் மக்கள் குவிந்தனர்.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், அண்டைய மாவட்டங்களான செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 17ந்தேதி முதல் ரேசன் கடைகளில் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதால், அதற்கான டோக்கன் வழங்கும்பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

சென்னையில் 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அவர்களுக்கு டோக்கன் வழங்கும்பணி 15ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ரேசன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று டோக்கன்களை வழங்க வரும் நிலையில், பல பகுதிகளில், பொதுமக்கள் ரேசன்  பொருட்கள் வாங்கக் கூடிய ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்,  அந்த பகுதிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.  ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், டோக்கனை பெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று  அதிகாலை முதலே பல வயதானவர்கள்  வரிசையில் நிற்க தொடங்கினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசு வழங்கும், டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத் தொகை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ரேசன்  கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை நிவாரண தொகை  கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.