சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்கிறார். இதற்காக வரும் 28ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகளும், திமுகவினர் செய்து வருகின்றனர்.

28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்படும்முதலமைச்சர்  10 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கால் மூலம் சாலை வழியாக  காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது,  ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின்மூலம் மாணாக்கர்கள், பாடங்களை தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ஸ்டெம் ஆன் வீல்ஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். இதில் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் எறையூர் செல்கிறார். அங்குள்ள கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை தொடங்கி வைக்கிறார். பின்னர் எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

பிற்பகல்,  கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.  அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார்.

மறுநாள் 29-ந்தேதி (செவ்வாய்க்கழமை) காலை 9.15 மணிக்கு விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு செல்கிறார். பின்னர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

அதைத்தொடர்ந்து, அரியலூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதல்வரை வரவேற்க கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.