தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் தற்போதைய சந்தை நிலவரத்துக்கும் வழிகாட்டி மதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு பத்திரப்பதிவு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையிலும், நிலங்களின் வழிகாட்டி மதிப்புகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வருவாய் கசிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பத்திரப்பதிவுத் துறையில் வருவாய் கசிவை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, வழிகாட்டி மதிப்புகளை சீரமைப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கிராமம் வாரியாக தற்போதைய வழிகாட்டி மதிப்பு, புதிதாக நிர்ணயிக்கப்பட வேண்டிய மதிப்பு உள்ளிட்ட விவரங்களை சார் பதிவாளர்களிடம் இருந்து பதிவுத்துறை பெற்று வருகிறது.
எந்தப் பகுதியில் எவ்வளவு உயர்வு?
மாநகராட்சிப் பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நில வழிகாட்டி மதிப்புகள் அதிகபட்சமாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், அப்பகுதியின் வளர்ச்சி மற்றும் தன்மைக்கு ஏற்ப 50 சதவீதம் வரை மதிப்பு உயர்த்தப்படலாம்.
நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கம் குறைவாக உள்ள ஊரகப் பகுதிகளில், வழிகாட்டி மதிப்புகள் 30 சதவீதம் வரை திருத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விவசாய நிலங்களுக்கும் புதிய மதிப்பு?
விவசாய நிலங்களின் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பையும் கணிசமாக உயர்த்துவதற்கான பரிந்துரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல இடங்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள குறைந்தபட்ச மதிப்பு, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டே, பத்திரப்பதிவுத் துறையின் ஆண்டு வருவாய் இலக்கு ரூ.35,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய வழிகாட்டி மதிப்புகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த இறுதி முடிவு, பட்டியல் தயாரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.