சென்னை; கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பிரபலமான சிவன் மற்றும் முருகன் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத்தின் கருப்பொருளான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை (27ந்தேதி)  கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்குகிறது. அதுபோல, சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த் திகை தீபத்திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது. ஆறுமுகன் குடியிருக்கும் பழனியில் 30ந்தேதியும்,  மதுரை மீனாட்சி அம்மன் சுந்ரேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 1ந்தேதியும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

ஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் உலகப் புகழ்பெற்றது. கார்த்திகை தீபத்தன்று, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணா மலையில்   மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்திருவிழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கக்கான பக்தர்கள் திருவண்ணாமலை குவிவார்கள். இதனால், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், பொதுமக்கள் தீபத்திருவிழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த முறை அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால், தற்போதே கோவில்களில் கூட்டம் அலை மோதி வருகிறது.

முன்னதாக 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.  அதன்படி திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது.

இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை  நாளை  (28-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது . இங்கு 12 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவானது  டிசம்பர் 8-ந்தேதி முடிவடைகிறது. நாளை  27-ந் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் திருவிழா தொடங்குகிறது.

28-ந் தேதி காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலாவும் நடக்கிறது.

29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்)1-ந் தேதி முடிய காலையில் சுவாமி படிச்சட்டத்திலும், இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

டிசம்பர்  2-ந் தேதி அன்று காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலாவும் நடக்கிறது.

டிசமபர் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும், இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

டிசம்பர் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும், இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

டிசம்பர் 7-ந்தேதி அன்று சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு அவரோகணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர்.

இதனையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, மற்றும் தொலைதொடர்புத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்வதற்கான முன்னேற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஒரு வாரம் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில், கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  வரும் 30-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.  திருவிழாவில் முதல் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு தங்கரத புறப்பாடும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது. பின்னர் மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது.  இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

துரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் 15 நவம்பர் 2022 2:23 PM கார்த்திகை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது. தீப தினத்தன்று லட்சதீபங்கள் ஏற்றப்படுகின்றன.  1-ந் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவின் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீபதினத்தன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.