சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதுரையில்  தொடங்கி வைக்கிறார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக  அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சில பகுதிகளில் பரிசார்த்த ரீதியாகவும் அமல்படுத்தப்பட்டத. இந்த நிலையில், காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை சிற்றுண்டி திட்டமானது முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. சுமார் 1லட்சத்து 14ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட  14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்த காலை சிற்றுண்டி திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.