டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின்கட்ரி மற்றும் சோனியா காந்தியை சந்தித்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராக பதவி ஏற்றபிறகு, பல முறை டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்றுதான் முதன்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் ஏப்ரல் 2ந்தேதி திமுக அலுவலகமான அறிவாலயம் திறந்து விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு நேற்று இரவு (30ந்தேதி)  சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இன்று மதியம், பிரதமர் மோடியை, நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். தொடர்ந்து திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுத்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்சரியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் சாலை மேம்பாடு குறித்து விரிவாக விவாதித்தார். இந்த  சந்திப்பு மிக ஒரு நீண்ட சந்திப்பாக இருந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக தேவைகள் குறித்த மனுவை அளித்ததுடன், பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினார். அத்துடன் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். தொடர்ந்து.  நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி அறிவாலயம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

டெல்லி தீன தயாள் உபாத்யா சாலையில் திமுக அலுவலகம் அருகேதான் பாஜக அலுவலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.