சென்னை: மறைந்த சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  சங்கரய்யா உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலி, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கரய்யா காலமான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாளவன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள்,  அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா, சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தியாகி  சங்கரய்யாவின் உடல்,  இன்று 12 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு,  பிற்பகல் 3 மணிக்கு சென்னை தியாகராயர் நகர் வைத்தியராம் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.  அங்கு கட்சியின் தோழர்கள்,  அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.