சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறத. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான  திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், மழை பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  அமைச்சர்கள் அங்கு சென்று,  தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக நேற்று சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும்,  அவசர கட்டுப்பாட்டு மையத்தில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ள பாதிப்புகள் மற்றும் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது,   கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆட்சியர் களிடம் காணொலி வாயிலாக முதல்வர் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், NorthEastMonsoon மழையின் தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து, மக்களைப் பாதுகாத்திடுமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அவசரத் தேவைகளுக்குப் பொதுமக்கள் 1070, 1077 எண்களிலும் 9445869848 என்ற WhatsApp எண்ணிலும் தொடர்புகொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார்.