சென்னை: தலைநகர் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும், 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.

சென்னையில் ஆண்டு தோறும்  புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சார்பில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பாபசியின் 46 ஆவது புத்தக கண்காட்சி ஆகும். முன்னர் சென்னையில் 41 முறையும், மதுரையில் 12 முறையும் கோவையில் 4 முறையும் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்தியாவில் புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஒரு முறை என நிரந்தரமாக தமிழ்நாட்டில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், முதன்முறையாக  3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சியும் நடைபெறுகிறது. நடப்பாண்டு,  சுமார் 1,000 அரங்குகளுடன் இந்த புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி, ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 அளவில் தொடங்கி வைத்தார். இநத் புத்தகக் கண்காட்சி நடைபெறும் 17 நாட்களும் காலை 11 முதல் இரவு 8.30 வரை புத்தக விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் புத்தகக் காட்சியில் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்று பபாசி தெரிவித்துள்ளது. மேலும், நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவான இன்று 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பெயரில் பொற்கிழி விருதுடன் தலா ரூ.1 லட்சம் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும்,  பொற்கிழி விருதை பொறுத்த அளவில், தேவி பாரதி, சந்திரா தங்கராஜ், தேவதேவன், சி.மோகன், பிரளயன், பா.ரா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதேபோல பாபாசி சார்பிலும் 9 பேருக்கு பதிப்பகச் செம்மல் விருது உட்பட பல சிறப்பு விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

கடந்த முறை புத்தகக் காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை இது 1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என பாபசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்று பாலினத்தவர்கள் நடத்தும் குயர் பதிப்பகத்திற்கும் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் புத்த விற்பனையாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர்.

புத்தகக் காட்சியின் ஒரு அங்கமாக மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தினமும் மாலை மைதானத்தின் வளாகத்தில் பட்டிமன்றம், எழுத்தாளர்கள் உரை ஆகியவை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளது. மேலும் புத்தகங்கள் மீது இளம் தலைமுறையினருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பபாசி சான்றிதழ்களை வழங்குவதாக அறிவித்து உள்ளது.