மதுரை:  சேலம் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க சுவாதி மறுத்து வந்த நிலையில், அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆணவக்கொலையான, சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை அமைப்பின் தலைவர் யுவராஜ், உள்பட பலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில், யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த 2021ம் ஆண்டு  மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த  வழக்கின் முக்கிய சாட்சியான, கோகுல்ராஜ் காதலி என்று கூறப்படும்  சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் சுவாதி மீது தானே வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தனர்.  இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கடந்த விசாரணைகளின்போது,  நீதிபதிகளின் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காத சுவாதி, தீபதிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானார்.  மேலும், சுவாதி கோகுல்ராஜுடன் செல்லும் வீடியோவை காட்டி கேட்டபோதும் அது நான் இல்லை என்று மறுத்தார். இதனால், அவர்மீது குற்றவழக்கு பதிவு செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 6ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது, கோகுல் ராஜும், சுவாதியும் பேசிக்கொண்டிருந்த போது தான் சென்று விசாரணை நடத்தியதை தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், கோகுல்ராஜிடமிருந்து சுவாதியை பிரித்து அழைத்து செல்வதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல்ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொலி குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போனில்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

அதேபோல் இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோகுல்ராஜுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தொடர்பான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உணர்வுகள் அடிப்படையில் அல்ல எனவும் தெளிவுபடுத்தினர். இதைத்தொடர்ந்து, இது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக கோகுல்ராஜின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் நாளை தள்ளி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பிறழ் சாட்சி அளித்த சுவாதி குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, ஜனவரி 22ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அமைப்பு, பாதைகள் போன்றவற்றை ஆராய  நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக உத்தரவிட்டனர். மேலும், வழக்கின்  விசாரணையை வரும் 20தேதி ஒத்திவைத்தனர்.