சென்னை: கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிவிதிகளை மீறினால் ரூ.25,000 அபராதம் விதித்து, சட்ட விதிகளைத் திருத்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தனியார் லாரிகள் கழிவுநீரை கண்ட இடத்தில் ஊற்றினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து தனியார் கழிவுநீர் அகற்றும்  நிறுவனங்கள் மூலம் அகற்றப்படும் கசடு, கழிவுகள் ஆங்காங்கே சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, நோய் பரவும் நிலை உருவாகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. இந்த நிலையில், அதற்கான விதிகளை திருத்தி, அபராதம் அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, மலக்கசடு உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது, விதிகளை மீறினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மலக்கசடு உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது, விதிகளை மீறினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஏற்கெனவே வகுத்துரைக்கப்பட்டுள்ள விதிகளைத் திருத்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம்: மலக்கசடு, கசடு கழிவு மேலாண்மைக்கான தேசியக் கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முழு அளவிலான சுகாதாரத்தை வழங்குவதற்காக, கழிவுநீா் தொட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டுகின்றன. மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றி, வெளியேற்றும் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான திட்டம் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கங்களுக்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றுக்கென சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களைத் திருத்தி, புதிய விதிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சட்டம் மற்றும் விதிகளின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு: மலக்கசடு மற்றும் கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்களுக்கு, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமமானது, விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் அளிக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். உரிமம் பெற்றவா் தவிா்த்து வேறெந்த நபரும் கட்டடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது போன்ற பணிகளில் ஈடுபடக் கூடாது.

உரிமம் பெற்றவா்கள், அதில் குறிப்பிட்டபடி, நேரம், வழி ஆகியவற்றை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். உரிமம் பெற்றவரின் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதுடன், இந்தக் கருவி எந்தவித இடையூறும் இல்லாமல் தொடா்ந்து செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். கட்டணம் எவ்வளவு? உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியை ஒருமுறை பயன்படுத்த 6,000 லிட்டா் வரை ரூ.200-ம், அதற்கு மேற்பட்ட வகைகளுக்கு ரூ.300-ம் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

உரிமதாரா்கள் தவறிழைத்தால் அதுகுறித்த புகாா்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால், முதல் முறையாகச் செய்யும் தவறுக்கு ரூ.25,000 வரை அபராதமும், இரண்டாவது மற்றும் தொடா் குற்றங்களுக்கு ரூ.50,000 வரையிலும் அபராதம் விதிக்கலாம். தொடா் குற்றங்களைச் செய்தால், உரிமம் சஸ்பெண்ட் அல்லது ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவோா் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.