சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் முதல் நாளிலேயே போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்புமனு தக்கல் செய்தார். அதேபோல அதிமுக அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் வேட்புமனு தக்கல் செய்தார். மேலும் ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,   முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்றிரவு சேலம் சென்றார்.

இன்று காலை பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, நாள் முழுவதும் எடப்பாடியில் பிரசாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

அதுபோல, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று முற்பகல்  சென்னை  அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3ஆவது முறையாகக் களமிறங்குகிறார்.