சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் நாளை மாலை முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார். நாளை மாலை சேலம் அருகே உள்ள வாழப்பாடியில் முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல்  மாதம் 6–ந் தேதி நடைபெற இருக்கிறது. நாளை  (12ந்தேதி  முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. 19–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  அரசியல்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதிகள்அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில்  தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது.

அதிமுக கூட்டணியில்  பா.ம.க., பாரதீய ஜனதா, தா.ம.க. உட்பட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பா.ம.க.வுக்க 23 தொகுதிகளும், பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு எந்தெந்த தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய 5 தோழமை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் போக இன்னும் 9 தொகுதிகள் இருக்கின்றன. இதில் த.மா.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கிறது. அதிமுக சார்பில்  177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து, நாளை தேர்தல் அறிக்கை வெளியிட உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  நாளை மாலையே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் வாழப்பாடிக்கு வருகிறார். பின்னர் முதல் கட்ட பிரச்சாரத்தை ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பஸ் நிலையத்தில் மாலை 5 மணி அளவில், அதிமுக சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு ஓட்டு கேட்டு பேசுகிறார்.

தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு கெங்கவல்லி அண்ணா தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை பகுதியில் இரவு 8 மணிக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் காரில் சேலம் வரும் அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார்.

மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.