சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது,  சிதம்பரம் நடராஜர் கோயில் சட்டவிதிகளின்படி தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோவிலுக்கு சொந்தமான சொந்தமான நகைகள், சொத்துக்கள், வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது தீட்சிதர்களைக்கொண்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை அரசு கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கிடையில், அங்கு அவ்வப்போது ஏற்படும் சில நிகழ்வுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், கோவி லில் உள்ள சிற்றம்பல மேடையில் (கனகசபையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோயில் பொதுதீட்சிதர்கள் தடை விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் (கனகசபையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் ஜோதி என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “சபாநாயகர் கோயில் (நடராஜர் கோயில்) நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, சட்டப் பிரிவு 23 மற்றும் 33-ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் கோயில், குழு உறுப்பினர்களால் வரும் (ஜூன்) 7-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள், 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், அதற்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், அந்த சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப் பதிவேடு, மரப் பதிவேடு, திட்டப் பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை மதிப்பீட்டறிக்கை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகியவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். குழுவின் ஆய்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.