சிதம்பரம் நடராஜர் கோவில் ஆடம்பர திருமணம்: பட்டு தீட்சிதர் தற்காலிக பணிநீக்கம்..

Must read

சிதம்பரம்:

பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் மரபுகளை மீறி ஆடம்பரம் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து, கோவிலின் பிரதான தீட்சிதரான பட்டு தீட்சிதர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படுவது கிடையாது. மேலும்,  திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது அரசு மற்றும் தனியார்  விழாக்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுவது இல்லை.

இந்த மண்டபத்தில்தான், ஆனிமாதம் மற்றும் மார்கழி மாதம் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்ட பின்பு பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.

இந்த பழமையான மண்டபத்தில் கடந்த 11ந் தேதி  சிவகாசியை சேர்ந்த ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலை அதிபர் ராஜரத்தினம் -பத்மா தம்பதியர் மகளான சிவகாமி , மற்றும் சென்னை தொழில அதிபர் மகன் சித்தார்த்தன் ஆகியோரின் திருமணம் மிகவும் ஆடம்பரத்துடன் நடைபெற்றது. இதற்காக அந்த மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும்,  திருமணத்திற்கு வருபவர்கள் அமரும் வகையில் குஷன் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அங்கேயே விருந்து உபச்சாரங்களும் நடைபெற்றது.

இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில்,  திருமண நிகழ்ச்சிக்கு தீட்சிதர்கள் எவ்வாறு அனுமதி கொடுத்தனர் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து பதில் தெரிவித்த கோவில் டிரஸ்டியுமான பட்டு தீட்சதர், மணப்பெண் சிவகாமிக்கு அங்கு திருமணம் நடக்க வேண்டும என்பது நடராஜரின் அருள், இதைத்தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், இதற்கு தீட்சிதர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று மாலை தீட்சிதர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவில் மரபுகளை மீறி  செயல்பட்ட பட்டு தீட்சிதர் தற்காலிக பணிநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமது செயலுக்காக பொதுதீட்சிதர்கள் முன்னிலையில் பட்டு தீட்சிதர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட  தடை நீக்கம் குறித்து அடுத்த தீட்சிதர்கள் கூட்டத்தின்போது  முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

More articles

Latest article