சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக எழுந்த புகாரில் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றதாகவும் அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிறுமிகளுக்கு திருமணம் செய்த விவகாரத்தில் அவர்களின் சட்ட ஆலோசகரின் ஒப்புதலுடன் சிறுமிகள் பரிசோதனைக்கு ஆஜர் படுத்தப்பட்டனர்.
நான்கு சிறுமிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு ஆஜரானார்கள், அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது போல் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை, அதேபோல் இந்த சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாக பரவும் தகவலிலும் உண்மையில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
6 மற்றும் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இருவிரல் கன்னித் தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்ட நிலையில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
மேலும், தீட்சிதர்கள் மீது தமிழக அரசு பழிவாங்கும் போக்கைக் கடைபிடிப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
ஆளுநரின் பேட்டி அதிகார வரம்பை மீறுவதாகவும் அரசியல்சாசனத்திற்கு முரணாகவும் உள்ளதாக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் தமிழக காவல்துறைதரப்பில் இருந்து இந்த அறிக்கை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.