இம்பால்

சுமார் 150 தமிழர்கள் குறிப்பாகப் பல மருத்துவர்கள் மணிப்பூர் வன்முறைக் கலவரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.


மணிப்பூரில் வசிக்கும் பல இனக் குழுக்களில் நாகா, குக்கி, மைத்தேயி குழுக்கள் முக்கியமானவை ஆகும்.   இவர்களில் மைத்தேயி இன மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையை விடுத்தனர்.   இதற்குக் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இரு இனங்களுக்கு நடுவே கடும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூர் முழுவதும் வெடித்த வன்முறை மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியது. இந்த மோரே நகரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர். இங்கு தமிழர்கள் சமூகம் மதிப்பும் மரியாதையுடனும் செல்வாக்கு மிக்க சமூகமாகவும் இருந்து வருகிறது.  இப்போதைய மோதலில் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மைத்தேயி குழுவினரை இலக்கு வைத்து குக்கி இனத்தவர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர்களது வீடுகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போது இந்த வீடுகள், தேவாலயங்களைச் சுற்றி இருந்த தமிழர்களது வீடுகளும் எரிந்து சாம்பலாகின. தமிழர்களின் உணவகங்கள் உள்ளிட்டவையும் தீக்கிரையாக்கின.

இந்த வன்முறையால்  சுமார் 150 தமிழர்கள் கடுமையாக துயரடைந்துள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.   இவர்களில் பலர் மருத்துவர்கள் ஆவார்கள்.  இந்த தமிழர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் மாநில அரசு பார்த்துக் கொள்வதாக அரசு வட்டாரங்கள் கூறி உள்ளன.

குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், “நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மணிப்பூரில் உள்ள தமிழ்ச் சங்கம் அங்கு மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மருத்துவர்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டனர், இது தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் உடனடியாக வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.