ராய்கர்:
சத்திஸ்கர் முதல்வர் ராமன் சிங் பயணம் செய்த ஹெலிகாப்டர் பெயர் குழப்பத்தால் தவறான இடத்தில் இறங்கியது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘‘ஒரே பெயரில் இரண்டு கிராமங்கள் இருந்ததால் விமானி தவறிப் போய் தவறான கிராமத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி விட்டார்’’ என்றனர்.

ராய்கர் மாவட்டத்தில் 2 வெவ்வேறு பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள லிஞ்சிர் எனும் பெயர் கொண்ட இரு கிராமங்கள் உள்ளன. முதல்வர் ராமன் சிங் போக வேண்டியது பரம்கேலா பஞ்சாயத்து யூனியனிலுள்ள லிஞ்சிர் கிராமம் ஆகும்.

அங்கு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். விமானி பெயர் குழப்பத்தினால் புசாவர் பஞ்சாயத்து யூனியனிலுள்ள லிஞ்சிர் கிராமத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி விட்டார்.

ஆனால் ராமன் சிங் விழாவிற்கான சுவடு ஏதும் தெரியாததால் ஹெலிகாப்டரிலேயே அமர்ந்து கொண்டிருந்தார். பின்னர் தவறை உணர்ந்த விமானி மீண்டும் அவ்விடத்திலிருந்து 20 நிமிடங்கள் கழித்து கிளம்பிச் சென்றார்.

ஹெலிகாப்டரில் முதல்வரின் பாதுகாவலர்களும் உடனிருந்தனர். விஷயத்தை கேள்விப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக முதல்வர் இருந்த இடம் நோக்கி வந்து விட்டனர்.