சென்னை

சென்னை நகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் புகார்களைத் தெரிவிக்கக் கட்டுப்பாடு அறை அமைத்துள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையம் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

இன்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர குடிநீர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும்.

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 044-45674567 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும். 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள்,”

என்று கூறப்பட்டுள்ளது.