அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்…!!

மதுரை மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் அமைந்துள்ளது.

எப்படிச் செல்வது?

மதுரை  பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

சிறப்புகள் 

இங்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது.

அம்பாள் மத்திய புரி நாயகி தனி சன்னதியில் இருக்கிறாள். தாமரை மீது நின்றிருக்கும் இந் த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.

இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருள்வதால் இவர், ‘இம்மையிலும் நன்மை தருவார்” என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார்.

பொதுவாகச் சிவன் கோயிலில் லிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புறத்தைத் தரிசிப்போம்.

மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து இவர்களுடன் இம்மையிலும் நன்மை தருவாரையும் சேர்த்து மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை நடைபெறும் .

இவ்வூரில் புது கட்டிடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டிடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவங்குகிறார்கள்.

சிவன் கோயிலில் முருகனுக்குப் பூக்குழி இறங்குவது இங்கு தனிச்சிறப்பாகும்.

திருவிழாக்கள்

மாசியில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தை, சித்ரா பௌர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் மூலவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பிரார்த்தனைகள் 

செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும், வேலை கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

குரு தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.

 நேர்த்திக்கடன்கள் 

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன், அம்பிகைக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர் .