சென்னை:

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், கடன் வாங்கியவரால் மிரட்டப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். அவரை பள்ளி மாணவர்கள் பத்திரமாக காப்பாற்றினர். இந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருபானந்தம். இவர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியின் கட்டித்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைக் கண்ட மாணவர்கள் அவரை சாமர்த்தியமாக காப்பாற்றி மாடியில இருந்து கீழே அழைத்து வந்தனர்.

இதுகுறித்து விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான முரளிதரன் என்பவர், ஆசிரியர் கிருபானந்தத்திடம்  5 லட்சம் ரூ பணத்தை கடனாக வாங்கி விட்டு, திருப்பி கொடுக்க மறுத்ததாகவும், இதை கேட்ட ஆசிரியரை  ஆள் வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கும், அவமானத்துக்கும் ஆளான கிருபானந்தம், தீடீரென்று பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் அவரை காப்பாற்றினர்.  உடடினயாக அவரை, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘இதுகுறித்து பம்மல் சங்கர் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.