சென்னை: கடந்த 2006, 2007ல் தேர்வு செய்யப்பட்ட 4500 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பட்டியலை துறைவாரியாக சமர்ப்பிக்கும்படி தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தது. இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அவற்றை சரி செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என கூறப்பட்டது.

இந்த உத்தரவுக்கு முரணாக நிதி கல்வி, உள்துறை வருவாய், மருத்துவத் துறைகளில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த தட்டச்சர் 4500 பேர்களில் பலருக்கு ஊதிய உயர்வு பலன் வழங்கியது போல் தங்களுக்கும் வழங்கக்கோரி வேளாண் துறையில் பணிபுரியும் 18 பேர் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர் சுரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம் மற்றும் நிதித்துறை செயலாளர் சேர்த்து 2010 இல் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட பலன்கள் 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் 2006 மற்றும் 2007 தேர்ந்தெடுக்கப்பட்ட 4500 பேரின் பட்டியல், துறை வாரியான ஒதுக்கீடு, ஒவ்வொரு துறையிலும் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.