சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்க ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் ஓட்டு சாவடி மையங்களுக்கு சென்று ஓட்டுச் சாவடி நிலை அலுவலரிடம் படிவம், 6 -பி கொடுத்தல் அல்லது பெறுதல், கருடா மொபைல் செயலி வாயிலாக ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்டங்களின் பல பகுதிகளில் ஓட்டு சாவடிகளிலும், வருகிற 3 மற்றும் 4ம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் ஓட்டு சாவடியில், ஓட்டிசாவடி அலுவலர்கள், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பணியில் இருப்பர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டை, ஆதார் மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைலுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு,  தமிழகத்தில் உள்ள 6.21கோடி வாக்காளர்களில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆகஸ்டு 1ந்தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 26.7% பேர் ஆதாரை இணைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.