சென்னை: டெண்டர் முறைகேடு  தொர்பாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக, சென்னை உயர்நீதி மன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த அறிக்கையை படித்து பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  அமைச்சர் வேலுமணி மீதான விசாரணையில் திருப்தியில்லை என  அதிருப்தி தெரிவித்து உள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார்கள் தொடர்பாக,  நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறையின்  ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை  அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, வேறு விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட முடியுமா? என  கேள்வி எழுப்பினர்.

மேலும், விசாரணை நடத்தும்,  விசாரணை அமைப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து செப்டம்பர் 28 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்துக்கும், தெரிவித்தும், அரசுக்கும் உத்தரவிட்டும், விசாரணையை ஒத்திவைத்தனர்.