சென்னை

மலாகக்ததுறையினர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து இன்று உயர்நீதிமன்றம் முடிவு தெரிவிக்க உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.  இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

நீதிபதி நிஷா பானு அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சட்டவிரோதம், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.  நீதிபதி பரதசக்கரவர்த்தி, கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது., நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவைச் சரி என்று தீர்ப்பு அளித்த அவர் மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் எத்தனை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்? என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும்  தன் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த ஆட்கொணர்வு வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் நீதிபதி பரதசக்கரவர்த்தி உள்ளதால், வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது

இரு நீதிபதிகளும் அப்போது செந்தில் பாலாஜியை எத்தனை நாட்கள் அமலாக்கத்துறையின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குவது? என்பது குறித்து முடிவு செய்ய உள்ளனர்.