சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் உடன் பிரதமர் மோடி இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசியதாக கூறப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்,  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீனவர்கள் 9 பேரையும்  அந்த வழியாக ரோந்து சென்ற  இலங்கை கடற்படை, அவர்கள் எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி கைது செய்து, இலங்கை அழைத்துச் சென்றது. அங்குள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 15 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கை அதிபர் இந்தியா வருகையையொட்டி, 15 பேரும், இனிமேல் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற  நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.