சென்னை

ரசுத் துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.    ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் குறித்து ஆய்வு நட்த்தி பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.  ஆயினும் ஒரு சில புகார்கள் இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை போரூர் அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமான 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தங்களது பெயருக்கு மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்குப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில், வருவாய்த் துறை ஆவணங்களும், நில உரிமையாளர் என உரிமை கோருவோரின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகளை முடித்து நிலங்களை மீட்பதற்குக் கால அவகாசம் தேவை, என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி தனது உத்தரவில், ”தமிழக அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து கோயில் நில அபகரிப்பாளர்கள் மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு  ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கோதண்டராமர் கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டத்தை 6 வாரத்தில் கூட்டித் தகுந்த முடிவெடுத்து அதன் அடிப்படையில் கோயில் நிலங்களை மீட்பதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் “ எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.