சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில்  அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை திருசசியில்  ரூ.1,084.69 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் மிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில்  இன்று ( 29 மற்றும் 30ஆம்) மற்றும் நாளையும்   சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்ற முதல்வர் அங்கு சங்கம் ஹோட்டலில் இரவு தங்கினார். இன்று காலை தஞ்சை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து சாலை மார்கமாக புறப்பட்டு திருச்சி வரும் முதல்வர் மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்பு பிற்பகல் 3.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையிலிருந்து விழா நடக்கும்  ராம்ஜிநகர் அடுத்த உள்ள கேர் கல்லூரிக்கு  செல்லும் முதல்வர் அங்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முதியோர் ஓய்வு ஊதியம், இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுதிறணாளிக்கான உபகரணங்கள் , பெண்கள் ,மகளிர் குழுவிற்கு நலத்திட்ட உதவிகள்,  என 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தொடர்ந்து  நாளை (டிச.30) நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் ரூ.1,084.69 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் ரூ.832 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு முனையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக 48 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ரூ.140 கோடி, 25 ஏக்கர் பரப்பளவில் கனரக சரக்கு முனையம் அமைக்க ரூ.76 கோடி, 152 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.75 கோடி, 100 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைப்பதற்கு ரூ.59 கோடி என ரூ.350 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளைஅடிக்கல் நாட்டுகிறார்.

நாளை  மாலை தாயனூரிலுள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை,உயர் கல்வித்துறை உள்ளிட்டவற்றில் ரூ.254 கோடி மதிப்பிலான 531 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக அரசின் சீர்மிகு திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.153.21 கோடி மதிப்பிலான 203 திட்டங்களை திறந்து வைக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறைகளின்கீழ் ரூ.327.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் திருச்சி தஞ்சை 2 நாள் பயணத்தையொட்டி,  அவர் செல்லக்கூடிய வழித்தடங்கள், தங்குமிடம், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் திருச்சி மாநகர காவல்துறையும், மத்திய மண்டல காவல்துறையும் இணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.