சென்னை: போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதில், அரசு மற்றும் அதிகாரிகளின் அத்துமீறல் நடைபெற்றுள்ளது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 12ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக பல பகுதிகளில் பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், வேட்பாளர்களுக்கான ஏலமும் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  அதுபோல பல பகுதிகல், பட்டியலின பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு பலர் தேர்வானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்   திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி பகுதியானது பட்டியிலின பகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. அந்த பகுதியில் ஒரு பட்டியலின குடும்பத்தினர் ஒருசிலர் மட்டுமே வசித்து வந்தாக கூறப்படுகிறது. அந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பட்டியலினர்தான் போட்டியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து,  அந்த ஊராட்சியிலுள்ள 9 வார்டுகளில் ஒருவர்கூட போட்டியிடாமல் தேர்தலைப் புறக்கணித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் இந்துமதி, திமுக சார்பில் விஜயலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளராக முனியம்மாள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 வேட்பாளர்களும்  வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர்.

இதற்கிடையில், வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  பட்டியலின பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார் என அறிவிக்கப்பட்டது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இந்துமதிக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில்,  பட்டியலினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு என அறிவிக்கப்பட்ட தவறு என கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட  கிராமத்தில் இல்லாத நிலையில், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது குறித்துத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை தலைவர் பதவியேற்பிற்குத் தடை விதித்தார். அடுத்த விசாரணை நவம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.