சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூலான மனோன்மணீயம் நூலில் ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவம்வர் 23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். அவ்வரசாணையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது. இதை தற்போது தமிழக பாடல் என ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், மனோன்மணீயம் நூலில் ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை 1970ம் ஆண்டு  அப்போதைய முதல்வர் கருணாநிதி மாற்றியது தவறு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தப்பட்டது குறித்து இப்போது வழக்கு போட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.