சென்னை: சென்னை மக்கள் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருக்கும் அவலம் சென்னை மாநகராட்சியின் இணையதள பதிவு வாயிலாக நீங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள தடுப்பூசி முன்பதிவு முறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையிலும், மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.  தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடையே ஆர்வம் மிகுந்துள்ளதால், பல தடுப்பூசி மையங்களில் ஏராளமானோர் குவிவது மட்டுமல்லாமல் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வந்தது.

இதை தடுக்க மாநகராட்சி சார்பில் இணையதளம் மூலம் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்யும் இணையதளம் 24ந்தேதி அன்று தொடங்கப்பட்டது.  சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு  https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற இணையதளத்தை  ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.

இந்த இணையதள வசதியின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையத்தினைத் தேர்வு செய்து, அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், என்ற 044-4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33644 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்புகொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னையில் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்களும் அறிவிக்கப்பட்டது. 23ந்தேதி  முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 45 சிவறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  இதனால் ஏராளமானோர் இணையதளம் மூலம் தடுப்பூசி போடுவதற்கான நேரம் மற்றும் மையத்தை இணையதளம் மட்டுமல்லாது, போனிலும், வாட்ஸ்அப்பிலும்  புக் செய்து வருகின்றனர்.

அதன்படி, இணையதளம் அல்லாமல், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்ணுக்கு முதல் நாளிலேயே 17,300 பேர் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 4550 பேர் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் இணையதள பதிவுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்,  இணையதள பதிவானது மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்,  அந்த நேரத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்ததுடன் தற்போது கோவாக்சின் மட்டுமே கையிருப்பு உள்ளதால், அதை மட்டுமே இணையதளத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் அசத்தல் நடவடிக்கை காரணமாக,  பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருப்பதையும், அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.