சென்னை

சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

மாதிரி புகைப்படம்

உலகெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.  உலக அளவில்  கொரோனா பரவலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 53000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அனைத்து பெரு நகரங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் பெருங்குடி பகுதியில் குறிப்பாக ஓ எம் ஆர் சாலையில் பல ஐடி நிறுவனங்கள் உள்ளன.    இங்கு துரைப்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்தனர்.  அதில் அந்த பகுதியில் இருந்த ஒரு ஐடி கட்டிடத்தில் உள்ள 5 ஆம் மாடியில் தொற்று உள்ளது தெரிய வந்தது.

அங்கு அமைந்திருந்த நிறுவனத்தின் 364 ஊழியர்களிடம் சோதனை நடந்த போது கொத்தாக 40 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.   இவர்கள் அனைவரும் 25-29 வயதுடையவர்கள் ஆவார்கள்,  அந்த கட்டிடத்தில் உள்ள மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் 1123 பேருக்கு தற்போது சோதனை நடந்துள்ளது.  அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பில் இருந்த 140 பேர் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி அந்த கட்டிடத்தில் உள்ள 7 நிறுவனங்களையும் மூடி உள்ளது.  சென்னையில் மடிப்பாக்கம், திநகர், மைலாப்பூர் ஆகிய இடங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.  இந்நிலையில் பெருங்குடியிலும் ஒரே இடத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.