சென்னை

தனது நிறுவன டெலிவரி ஊழியர்களுக்குத் தங்கள் செலவில் கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கு உணவு வழங்கும் நிறுவனங்களில் முதல் இடங்களில் உள்ள நிறுவனங்களில் ஸ்விக்கியும் ஒன்றாகும்.   கடந்த கொரோனா ஊரடங்கின் போது பலரால் வெளியே வர முடியாத நிலை இருந்தது.  அப்போது அவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கியதால் ஸ்விக்கி நிறுவனத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு உள்ளதால் இவர்களுக்கு கொரோனா பரவ அதிக அளவில் வாய்ப்புள்ளது.  மேலும் இவர்கள் உணவு வழங்கும் பணியில் உணவுகள் மூலமும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.  தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மக்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர்

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது இரண்டாம் கட்டமாக நடைபெற்று  வருகிறது.  தற்போது 60 வயதை தாண்டியவர்களுக்கும் 45 வயதைத் தாண்டிய இணை நோய் உள்ளவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  வரும் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி நேற்று ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் நிறுவன டெலிவரி ஊழியர்களுக்கு எங்கள் செலவில் கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளோம்.  எங்கள் நிறுவனத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டெலிவரி ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் 5500 பேர் உள்ளனர்.

முதல் கட்டமாக இந்த 5500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.  விரைவில் அரசின் அறிவிப்புக்கு ஏற்ப மொத்தமுள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி தங்கள் செலவில் போடப்படும் என அந்நிறுவன அதிகாரி விவேக் சுந்தர் தெரிவித்துள்ளார்.   அத்துடன் கொரோனா ஊசி போட்டுக் கொள்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பும் நிறுவனம் வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.