டில்லி:

ச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த திட்டம், உச்சநீதி மன்ற உத்தரவு ஆகியவை இன்று அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

காவிரி தொடர்பாக உச்சநீதி மன்ற உத்தரவின்படி, மத்தியஅரசு தாக்கல் செய்திருந்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்பதாக உறுதி செய்து கடந்த மே மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பருவமழை தொடங்குவதற்கு முன்னனே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்

இந்த நிலையில், தற்போது தமிழகம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தவித மேல்நடவடிக்கை யும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து மத்தியஅரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த  மத்திய நீர் வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையயம் அமைக்கவும், காவிரி வரைவு திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும்,  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மாநிலங்கள் சார்பாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து  4 மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.