இலவச கொரோனா தடுப்பூசியும் பெட்ரோல் விலை உயர்வும் : மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Must read

டில்லி

மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல் விலை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா தாக்கம் குறைந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.    மத்திய அரசு இந்த தடுப்பூசி மருந்துகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து புது உச்சங்களை எட்டி வருகிறது.  சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102 ஐ நெருங்கி உள்ளது.  இதையொட்டி பொதுமக்கள் பெரும் துன்பம் அடைந்துள்ளனர்.  சமூக ஊடகங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அமைச்சர், “அரசு நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் பெட்ரோல் விலை உயர்வு முக்கிய அங்கம் வகிக்கிறது.

இமயமலை தண்ணீர் பாட்டிலின் விலை  பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது.    மேலும் பெட்ரோல் விலையை உயர்த்தியதால் தான் பொது மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிந்தது” எனக் கூறி உள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article