பெங்களூரு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த வழக்கில் கர்நாடக உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபடுள்ளது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவருக்குச் சிறையில் சிறப்புச் சலுகைகள் வழங்கியதாக புகார்கள் வந்தன.  சிறைத்துறை டிஜிபி ரூபா இதை விசாரித்தார்.

இந்த விசாரணை முடிவில் சிறப்புச் சலுகைகளை பெ|ற டிஜிபி சத்யநாராயண ராவ் மற்றும் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு  சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாக ரூபா குற்றம் சாட்டினார்.  மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் குழு சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது உண்மை என அறிக்கை அளித்தது.

ஊழல் தடுப்பு காவல்துறையினர் சத்யநாராயண ராவ், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.  கர்நாடகா நீதிமன்றம் இவர்கள் மீது இந்த மாதம் 8 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.   மீண்டும்  இந்த வழக்கு நீதிபதி சதீஸ் சந்திர சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் இந்த 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் கோரப்பட்டது.  நீதிபதி அதை ஏற்று இந்த இருவர் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கர்நாடகா மாநில அரசின் உள்துறைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு இட்டுள்ளார்.